அதிகாரிகள் அதிரடி வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் மார்ச் 22ம் தேதி பாடைகாவடி திருவிழா

வலங்கைமான்,ஜன.29: வலங்கைமான் வரதராஜம் பேட்டைத் தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் மார்ச் மாதம் 22 தேதி பாடைக்காவடி திருவிழா நடத்திட கோயில் அலுவலர்கள் மற்றும் தெருவாசிகள் கலந்து கொண்ட தேதி குறிக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் குடமுருட்டி ஆற்றின் அருகில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனிமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத பாடைக்காவடி திருவிழாவில் இந்துக்கள் முறைப்படி இறந்தவர் சடலத்தை எடுத்து செல்வதை போன்று பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் தொட்டில்காவடி, அலகுகாவடி, பறவைகாவடி, பால்குடம், அங்கப்பிரதட்சனம், பால்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா நடத்திடும் விதமாக தேதி குறிக்கும் நிகழ்ச்சி ஆலய செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற மார்ச் மாதம் 6ம்தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவும், 8ம்தேதி முதல்காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 15ம் தேதி இரண்டாம் காப்புகட்டும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்வான பாடைகாவடி திருவிழா மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும், 29ம்தேதி புஷ்பபல்லக்கும், ஏப்ரல் 12ம் தேதி பங்குனி கடைஞாயிறு திருவிழாவும் நடத்திட தேதி குறிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலய தக்கார் ரமணி, தலைமை பூசாரி செல்வம், ஆலய பணியாளர்கள், வரதராஜம்பேட்டை தெருவாசிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: