பண்டாரவாடை பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

பாபநாசம், ஜன. 29: பண்டாரவாடை பகுதியில் அரசு பேருந்துகள் நின்று செல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஊரில் தனியார் பேருந்துகளை தவிர்த்து அரசு பேருந்துகள் நிற்பதில்லை. இதனால் இந்த ஊரிலிருந்து தஞ்சாவூரில் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தினம்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், திருச்சியில் பேருந்தில் ஏறினாலும் பண்டாரவாடையில் பேருந்து நிற்காது என கூறி விடுகின்றனர். அய்யம்பேட்டையில் இறங்கி நகர பேருந்தில் ஏறி வர வேண்டியுள்ளது. இந்த பகுதியில் பேருந்துகள் நிற்காததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஊரில் பேருந்து நிழற்குடைகள் இருந்தும் பேருந்துகள் நிற்காத இடத்தில் நிழற்குடை எதற்கு என்கின்றனர். சில ஆயிரம் மக்கள் வசிக்கின்ற இந்த ஊரில் காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி மாணவர்கள், வங்கி ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் நலன் கருதி அரசு பேருந்துகளை நிறுத்தி செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: