பேராவூரணி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

பேராவூரணி, ஜன. 29: பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவுக்கான புதிய கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேராவூரணி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு குறுகிய அறையில் செயல்பட்டு வருவதால் நோயாளிகள் போதிய வசதியின்றி சிரமப்பட்டனர். இதையடுத்து விரிவான புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ கோவிந்தராசுவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து சித்த மருத்துவ பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென எம்எல்ஏ கோவிந்தராசு வலியுறுத்தினார்.

இதையடுத்து சித்த மருத்துவ பிரிவுக்கென தனியாக புதிய கட்டிடம் அமைக்க தமிழ்நாடு ஆயுஷ் சொசைட்டி ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கர் தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: