கோடைகாலம் விரைவில் துவக்கம் வெள்ளரிக்காய் விற்பனை மும்முரம் விலை உயர வாய்ப்பு

கும்பகோணம், ஜன. 29: கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு விலை உயர வாய்ப்புள்ளது. பனிக்காலம் முடிந்து கோடைகாலம் விரைவில் துவங்கவுள்ளது. ஆனாலும் கடந்த சில நாட்களாக இரவில் பனிப்பொழிவு இருந்தாலும், பகலில் கடுமையான வெயிலும் அடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக இளநீர், பதனீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட இயற்கை பழங்கள் மற்றும் பானங்களை வாங்கி குடிப்பர். இதுபோன்ற பானங்கள், இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உஷ்ணம் தணிந்து உடல் உபாதைகள் வருவது தடுக்கப்படும். கோடைகாலத்துக்கு வௌ்ளரிக்காய் மற்றும் பழங்கள் ஏற்ற உணவாக உள்ளது. கும்பகோணம் பகுதியில் சுவாமிமலை, மருதாநல்லூர், திப்பிராஜபுரம், சுந்தரபெருமாள்கோயில், பட்டீஸ்வரம், முழையூர், சுவாமிமலை, திருவைக்காவூர், திருப்புறம்பியம், அம்மாச்சத்திரம், திருபுவனம், பசுபதிகோயில், அய்யம்பேட்டை, பண்டாரவாடை ஆகிய பகுதியில் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு 500 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் வெள்ளரி சாகுபடிக்கு விதை ஊன்றப்பட்டது.

இதைதொடர்ந்து 30 நாட்களில் வெள்ளரி கொடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்து விடும். பின்னர் வெள்ளரி பிஞ்சுகள் காய்க்க ஆரம்பித்து விடும். வெள்ளரி பிஞ்சுகளை ஒரே வாரத்தில் பறித்து அதை விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும். வெள்ளரி பழங்கள் பழுத்து விட்டால் அதை சர்க்கரையோடு ருசித்து பொதுமக்கள் சாப்பிடுவர். அதனால் வெள்ளரிக்கு பிஞ்சிலும் சரி, முற்றிய பழத்திலும் சரி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

கும்பகோணம் பகுதியில் பறிக்கப்படும் வெள்ளரி பிஞ்சுகளை உள்ளூர் விவசாயிகள் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு 5 வெள்ளரி பிஞ்சுகள் அடங்கிய கட்டு ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கும்பகோணம் பகுதியிலிருந்து வெள்ளரி பிஞ்சுகளை வியாபாரிகள் வாங்கி திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக இடைத்தரகர் வியாபாரிகளும் உள்ளனர். வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே வரும் கோடை காலத்தில் வெள்ளரிக்காய் மற்றும் பழத்தின் விலை கடந்தாண்டை விட உயர வாய்ப்புள்ளது என வெள்ளரி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: