துணை கமிஷனர் அதிரடி நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 256 நாட்கள் சிறை

ஆவடி, ஜன.29:    ஆவடியை அடுத்த பட்டாபிராம், தண்டுரையை சேர்ந்தவர் நவராஜ் (22). பிரபல ரவுடி. இவர் மீது அரும்பாக்கம், அமைந்தகரை ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. பட்டாபிராம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று உள்ளார். இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் 5 ம் தேதி பட்டாபிராம் போலீசார் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க நவராஜை, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர், நவராஜிடம் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதி வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு பட்டாபிராம், தெற்கு பஜாரில் உள்ள பேக்கரி கடையில் கடனுக்கு பப்ஸ் தராததால் ஊழியர் திருப்பதி (30) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும்  அவர்,  தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து இரும்புக் கம்பியை எடுத்து கடையின் ஷோகேஸ் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  

புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து நவராஜ், உதயகுமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நன்னடத்தை உறுதிமொழியை மீறியதாக நவராஜை பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் நேற்று புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து வந்தார். பின்னர்,  அவரை  துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். இதன்பிறகு, அவர் நன்னடத்தை உறுதிமொழியை மீறியதாக நவராஜிக்கு ஓராண்டில் தவறுசெய்யாத நாட்களை கழித்து மீதி உள்ள 256 நாட்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதன் பிறகு போலீசார் அவரை புழல் சிறையில் மீண்டும் நேற்று மாலை அடைத்தனர்.

Related Stories: