பெரியபாளையத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் அறிமுக கூட்டம்

ஊத்துக்கோட்டை, ஜன.29:  பெரியபாளையம் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான அறிமுக  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான அறிமுக  ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.   துணைத்தலைவர் வக்கீல்  சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக  முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன்,  மாவட்ட கவுன்சிலர்கள் சித்ரா முனுசாமி, அம்மினி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். கிராம சபை கூட்டங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை அழைக்க வேண்டும். கட்சி பாகுபாடின்றி மக்களுக்காக பணிகள் செய்ய வேண்டும்.

கிராம புறங்களில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற  பிரச்னைகளை உடனே தீர்க்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பெண் தலைவர் பேச வேண்டும்.  பெண் தலைவர்களின் கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையீடு இருக்க கூடாது. ஊராட்சி விபரங்கள் குறித்து பெண் தலைவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: