இருங்காட்டுக்கோட்டையில் கார் உதிரிபாகங்களுடன் கடத்திய லாரி மீட்பு

சென்னை, ஜன. 29: பெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு கன்டெய்னர் லாரி, சென்னை நோக்கி புறப்பட்டது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த டிரைவர் ஜேம்ஸ் (34), லாரியை ஓட்டிச் சென்றார். இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு ஜேம்ஸ் மது அருந்தியுள்ளார். பின்னர் லாரியில் உறங்கினார். அப்போது லாரியின் அருகே வந்த 2 பேர், லாரியை கடத்திச் சென்றுள்ளனர். திடீரென விழித்துக் கொண்ட ஜேம்ஸ், மர்மநபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவர்கள், ஜேம்ஸ்சை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்தி சென்றனர்.

கீழே விழுந்த ஜேம்ஸ் படுகாயமடைந்தார். அவரை, பொதுமக்கள் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். புகாரின்படி, போலீசார் லாரியை தேடிவந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி, பூந்தமல்லி அருகே அனாதையாக நிற்பதாக பெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், லாரியை பொருட்களுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் லாரியை கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: