இ-சேவை மையம் இல்லாத அயப்பாக்கம்: அவதியில் மக்கள்

ஆவடி, ஜன.29:  ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி இ-சேவை மையம் இல்லாததால் மக்கள் அம்பத்தூர் அல்லது ஆவடிக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும், பண விரயமும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட ஊராட்சி ஆவடி அடுத்த அயப்பாக்கம். இங்கு சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பூர்வீக கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1.25லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கே 35க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மேற்கண்ட ஊராட்சியில் இதுவரை இ சேவை மையம் அமைக்கவில்லை. இதனால், மேற்கண்ட பகுதியில் குடியிப்புவாசிகள் சாதி, இருப்பிடம், வருமானம், வாரிசு, விதவை, மறுமணம், தொலைந்த சான்றிதழ், பட்டா, பட்டா பெயர் மாற்றம், சொத்து மதிப்பு உள்ளிட்டவைகளை பெறுவதற்கு பதிவு செய்ய அம்பத்தூர் அல்லது ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

அயப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆவடிக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், அம்பத்தூருக்கு  3 கிலோ மீட்டர் தொலைவும் உள்ளது.  இதனால் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். சிறிய ஊராட்சிகளில் கூட இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவு மக்கள் தொகை கொண்ட அயப்பாக்கம் ஊராட்சி சேவை மையம் இல்லாதது பெரும் குறையாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அயப்பாக்கம் ஊராட்சியில் போர்க்கால அடிப்படையில் இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: