நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் திருமயம் அருகே பரபரப்பு ரூ.5 லட்சத்திற்கு குழந்தை சட்டவிரோதமாக விற்பனையா?

திருமயம்.ஜன.29: திருமயம் அருகே பெற்றோர்களே குழந்தையை விற்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் பஞ்சாயத்தை சேர்ந்தவர் காடப்பன்(40). இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தம்பதியினர் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்து விட்டதாக நேற்று சைல்டு லைனில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பிறந்த ஐந்தே நாளில் அந்த குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக மர்ம நபர் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் சசிகலா, சைல்டு லைன் துணை இயக்குனர் குழந்தைவேலு, சைல்டு லைன் களப்பணியாளர் ராஜலட்சுமி ஆகியோர் சென்றனர். ஆனால் தம்பதியினர் வீட்டில் இல்லாததையடுத்து அதிகாரிகள் திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தம்பதியினரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் தம்பதியினர் குழந்தையுடன் சரணடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தம்பதியர் தகவலில் திருப்தியடையாத அதிகாரிகள் திருமயம் மகளிர் காவல் நிலையத்திற்கு குழந்தையை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது பற்றி போலீசாரிடம் கேட்ட போது தம்பதியின் மூத்த மகளுக்கு திருமண வயதை நெருங்கி விட்ட நிலையில் குழந்தை பிறந்ததால் மகளின் திருமணத்திற்கு இடையூராக இருக்கும் என கருதி உறவினர் வீட்டில் குழந்தையை ஒப்படைத்ததாகவும், ஊடகத்தில் செய்தி வெளியானதும் குழந்தையை உறவினரிடம் இருந்து வாங்கி கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சரணடைந்ததாவும் தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தைக்கு போலீசார் கருப்பையா என பெயரிட்டதோடு 3 மாத்ததிற்கு ஒரு முறை குழந்தையை போலீசில் காட்ட வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே திருமயம் பகுதியில் பணத்திற்கு குழந்தை விற்கப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: