செந்துறையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கியதால் லாரிகளை சிறைபிடித்த இளைஞர்கள்

அரியலூர், ஜன. 29: செந்துறையில் நேற்று மாலை தடை செய்யப்பட்ட நேரத்தில் வந்த சிமென்ட் ஆலை லாரிகளை இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் சிமென்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துகள் ஏற்படுவதால் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் டிப்பர் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கக்கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்துறையில் நேற்று மாலை தடை செய்யப்பட்ட நேரத்தில் சிமென்ட ஆலையில் 20 வாகனங்கள் இடைவெளியின்றி சென்றது. இதனால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலை லாரிகளை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

இதைதொடர்ந்து கடைவீதியில் இருந்த பொதுமக்களும் இணைந்து நகருக்குள் புழுதி கிளம்பும் அளவுக்கு அதிக வேகமாக செல்வதாக புகார் கூறினர். இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட நேரத்தில் வாகனங்களை இயக்க மாட்டோம் என எழுதி கொடுக்குமாறு கூறி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: