தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா: மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்

திருவொற்றியூர், ஜன.29: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாதாரண அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான முகாம் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுத்தனர். அப்போது வடசென்னை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்திக்கொண்டிருந்த அதிகாரியிடம், “கடந்த முகாமின்போது மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக நாங்கள் கொடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லயே, ஏன் மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கிறார்கள்” என்று கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: