₹86 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் புறவழிச்சாலை பணி நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர், ஜன. 29: திருவள்ளூர் நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான அனுமதி வழங்கி, திட்ட செலவிற்காக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் துவங்காததால், வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூரைச் சுற்றி, தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஏராளமாக  உள்ளன. இத்தொழிற்சாலைகளுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகரம் வழியாக வந்து செல்கின்றன. சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள், செங்குன்றத்தில் இருந்து சென்னை புறநகர் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருவள்ளூர் நகருக்குள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும், ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும் என்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்த சாலைகளில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ளன.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், வங்கிகளுக்கு செல்வோர், போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நெரிசலுக்கு ஒரே தீர்வு புறவழிச்சாலை அமைப்பது என பொதுமக்கள் வலிறுத்தி வந்தனர். இந்நிலையில், 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஆயில் மில் பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் அருகில் துவங்கி, சேலை கிராமம் வழியாக கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டோல்கேட் பகுதியில் இணையும் வகையில் புறவழிச்சாலை வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால், திருவள்ளூரில் நகரில் போக்குவரத்து நெரிசல் தலைதூக்கியது. குறிப்பாக, பெரியகுப்பம் ஜெ.என்.சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சி.வி.நாயுடு சாலை வரை 3 கி.மீட்டர் து?ரத்தை கடக்க ஒரு மணி நேரம் வரை ஆனது. அவ்வப்போது நெரிசலில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால், நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

அதன்பின், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேல்நல்லாத்தூரில் இருந்து கூவம் ஆற்றை கடந்து, சேலை கிராமம் வழியாக திருப்பாச்சூரை இணைக்கும் வகையில் 6 கி.மீட்டர் நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தில், கூவம் ஆற்றைக் கடக்கவும், ரயில் தண்டவாளத்தைக் கடக்கவும், இரண்டு மேம்பாலங்கள் கட்ட அரசின் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், புறவழிச்சாலை அமைக்க அனுமதி கேட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, திருவள்ளூர் புறவழிச் சாலை திட்ட ஒப்புதலை பரிசீலனை செய்த தமிழக அரசு, இத்திட்டத்தினை செயல்படுத்த அனுமதி வழங்கி நிலம் கையகப்படுத்தவும், இழப்பீடு தொகை வழங்கவும், திட்டத்தை நிறைவேற்றவும், ரூ.86.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியது.

ஆனால், 4 மாதங்கள் ஆகியும் நிலம் கையகப்படுத்தும் பணி உட்பட எந்த பணிகளும் இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் கடும் அவதிப்படுகின்றனர்.  

எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் புறவழிச்சாலை அமைக்க, நில அளவீடு செய்து, அதற்கான இழப்பீடு வழங்கி உடனே பணிகள் துவங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: