பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை, ஜன.29: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்று புழல் ஏரி. கடந்த ஆண்டு நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு தலைநகர் சென்னையை கடுமையாக பாதித்தது. பல நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை அறிவித்தன.  தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட சற்று அதிகமாக பெய்ததால் தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பின. சென்னைக்கான மழை அளவு இயல்பு அளவைவிட சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் ஆந்திராவில் பெய்த மழை காரணமாக கண்டலேறு அணையில் 40 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து, கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கான தண்ணீரை ஆந்திர அரசு கொடுத்து வருகிறது. தற்போது முதல் தவணை காலம் தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணா கால்வாயில் 304 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் 1507 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், 3,300 மில்லியன் கன அடியில் 2,938 மில்லியன் கன அடி நீரை புழல் ஏரி எட்டியது. அதாவது 3 டிஎம்சியை எட்டிய நிலையில், பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த 358 கன அடி நீர் முற்றிலும் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் தேவையை பெருமளவு புழல் ஏரி பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னை மக்கள் குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது

Related Stories: