நாகை வேளாங்கண்ணி பேராலய நிர்வாகத்தை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.29: வேளாங்கண்ணி பேராலய நிர்வாகத்தை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்கம் சார்பில் வேளாங்கண்ணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கத்தோலிக்க திருச்சபையில் சுமார் 65 சதவீதமும், தமிழ்நாடு - பாண்டிச்சேரி கத்தோலிக்க திருச்சபையில் சுமார் 75 சதவீதம் தலித் மக்கள் இருந்தும், தலித் ஆயர்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே உள்ளனர். எனவே தலித் கத்தோலிக்க மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் ஆயர்களை நியமிக்க வேண்டும். வேளாங்கண்ணியில் தலித் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டமான அந்தோணியப்பன் கல்லறை தோட்டத்தை கையகப்படுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற அரசு நிர்வாகத்திற்கு மறைமுகமாகவும், சாதி கிறிஸ்தவர்களுக்கு நேரடியாகவும் துணைப் போகும் பேராலய நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.

வேளாங்கண்ணி பேராலய நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட கடைகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய விகிதாச்சாரப்படி ஒதுக்கித் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்கம், தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் வேளாங்கண்ணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஆல்பர்ட்ராயன், ஜஷ்டின், தானியல், பேராசிரியர்கள் மேரி ஜான், ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: