தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் பகுதிநேரம் மட்டும் இயங்கும் சுகாதார வளாகத்தால் அவதி

கரூர், ஜன. 29: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் பகுதி நேரம் மட்டுமே இயங்கும் சுகாதார வளாகத்தை 24 மணி நேரமும் இயங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வடக்குத்தெரு, சவுரிமுடித்தெரு, வெங்கடேஷ்வரா நகர் மற்றும் குறிஞ்சி நகர்ப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் கடந்த 2015ம் ஆண்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொது நவீன சமூதாய கழிப்பிடம் கட்டி பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த பகுதியில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதியில்லாத காரணத்தினால் இந்த கழிப்பறை வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மூன்று ஆண்டுகள் மட்டும் சீராக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இந்த கழிப்பறை வளாகம் செயல்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் மூடப்பட்டு விடுகிறது.

இதனால் மதியத்துக்கு மேல் இதனை பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் இதனை யாரும் டெண்டர் எடுக்காத நிலையில், துப்புரவு பணியாளர்கள் மூலம் மட்டுமே இவை மதியம் வரை பணியில் அமர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. எனவே காலை முதல் இரவு வரை இந்த கழிப்பறை வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் கண்காணித்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்குத்தெரு பகுதியில் உள்ள இந்த பொது நவீன கழிப்பறை வளாகத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: