விருதுநகர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுக்க வழி தெரியாமல் முழிக்கும் சுகாதாரத்துறை

விருதுநகர், ஜன. 29: விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 2014-15ம் ஆண்டு ராஜபாளையம் பகுதியில் வேகமாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2014-15ல் மாவட்டத்தில் 32க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு டெங்கு கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. மூன்று வாரங்களுக்கு மேல் உயிர்வாழும் ஏடிஸ் கொசுக்கள், பகல் நேரத்தில் மட்டும் கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறப்புள்ளிகளுடன் உடலமைப்பு கொண்ட ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது.காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்கு பின்புற வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு அறிகுறிகளாக உள்ளன. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு பாதிப்பு இருந்தால் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழே குறைந்து விடலாம். பிளேட்லெட் என்னும் ரத்த தட்டணு எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்பரப்பளவு பரிசோதனைகளை டாக்டர் அறிவுரைப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும்.

2014-15 கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தி டெங்கு காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் மழை காலம் தொடங்குவதற்கு முன் பரவி, வெயில் காலத்தில் தனது தாக்கத்தை குறைத்துக் கொள்கிறது. 2014-15க்கு பின்பு ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு ஒற்றை இலக்கத்திற்கு இருப்பது உண்மையே.

டெங்கு பாதிப்பால் மரணம் என்பதை சுகாதாரத்துறை வெளியே சொல்லாமல் மறைத்து வருகிறது. கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய 2014-15 டெங்கு மரணத்தை கூட சுகாதாரத்துறை தனது கணக்கில் 8 ஆக காட்டி வருகிறது.

இந்நிலையில் 2019-20ல் டெங்கு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் 2019 ஆகஸ்ட் மாதம் பரவத்துவங்கிய டெங்கு மழை நின்ற பிறகு கொசுக்கள் உற்பத்தி அதிகாரிப்பால் வேகத்தை காட்டி வருகிறது.

காய்ச்சல் பாதித்தால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென அறிவுறுத்தும் சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளில் அதற்கான ரத்த பரிசோதனைகளை செய்து டெங்கு இருப்பதை உறுதிப்படுத்த மறுக்கிறது. அதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையங்களில் காய்ச்சல் பாதிப்பால் டெங்கு டெஸ்ட் எடுக்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தினசரி 2 முதல் 5 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருக்கும் நபர் வசிக்கும் பகுதிகளில் மட்டும் கொசுமருந்து அடிப்பது, சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வரும்முன் தடுப்பு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கிராமப்புறங்கள், நகர்புறங்களில் டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிப்பதில்லை. விருதுநகர் நகராட்சியில் இரவில் கொசு மருந்து அடிப்பதாகவும், ஏடிஸ் கொசுவை ஒழிக்க காலை, மாலை வேளைகளில் அடிக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். விருதுநகரை சுற்றிய ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு, பாவாலி, சத்திரரெட்டியபட்டி ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கவே இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: