மது, கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கி வைத்தார்

விருதுநகர், ஜன.29: விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் இருந்து மதுவிலக்கு ஆயத்தீர்வை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எஸ்பி., பெருமாள் முன்னிலையில் கலெக்டர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மது மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலெக்டர் கூறுகையில், மது அருந்தினால் பசியின்றி உடல் நலம் நினைவாற்றல் குறையும், கண்பார்வை இழப்பு, உடல் உறுப்பு பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாடு, சமூகத்தில் மரியாதை இழப்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதிப்பு, குடும்பத்தில் வறுமை, சாலை விபத்து, பொருள் இழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட தீமைகள் ஏற்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதோ, கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்தார். பேரணியில் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். மதுவுக்கு அடிமையாகாதே, கள்ளச்சாரயத்தை ஒழிப்போம், கள்ளச்சாரயத்தை குடிக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணி எம்ஜிஆர் சிலை, நகராட்சி, தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில் வழியாக தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணியில் டிஆர்ஓ உதயகுமார், ஏஎஸ்பி சிவபிரசாத், உதவி ஆணையர் முருகன், தாசில்தார் அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: