குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி பிப்.5ல் கையெழுத்து இயக்கம் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார் மாவட்டம்

தேனி, ஜன.29: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தேனியில் வருகிற பிப்.5ம் தேதி நடக்க உள்ள கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைக்க உள்ளார்.

திமுக கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தேனி-பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பெத்தாட்சிஆசாத், மதிமுக மாவட்ட செயலாளர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் நாகரத்தினம், சுருளி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற பிப்.5ம் தேதி தேனியில் சிறுபான்மை இயக்கங்களை இணைத்து கையெழுத்து இயக்கம் துவங்கும். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைக்கிறார். இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மனும் திமுக தேனி ஒன்றிய பொறுப்பாளருமான சக்கரவர்த்தி, தேனி வட்டார காங்கிரஸ் தலைவரும் தேனி ஒன்றிய துணை சேர்மனுமான முருகன், தேனி நகர காங்கிரஸ் தலைவர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: