பாலம் கட்டித்தரப்படுமா? ராயப்பன்பட்டி முதல் சண்முகநாதர் கோவில் வரை சாலை பணி தொடங்குவது எப்போது?

உத்தமபாளையம், ஜன.29: ராயப்பன்பட்டி முதல் சண்முகாநதி வரை உள்ள தார்சாலை புதிதாக போடுவதற்காக தோண்டப்பட்டு 4 மாதங்களை கடந்தும் இழுத்தடிக்கப்படுவதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராயப்பன்பட்டி கிராம ஊராட்சி. இங்கு 3 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இதனை தவிர கல்வியியல் கல்லூரி, ஐ.டி.ஐ., என கல்வி கிராமமாக திகழக்கூடிய இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே முழு முதற் தொழிலாக உள்ளதால் விவசாய கூலிதொழிலாளர்கள் குடும்பங்கள் ஏராளமாக வசிக்கின்றனர். இவை தவிர 10 கிராமங்களுக்கு மேல் பயன்பெறக்கூடிய சண்முகாநதி அணை நீர்தேக்கம், திராட்சைக்கு என தனியாக மாநிலத்திலேயே ஆராய்ச்சி நிலையம் இங்கு அமைந்துள்ளது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பின்பு இங்குள்ள ராயப்பன்பட்டி பஞ்சாயத்து போர்டு தெரு முதல் சண்முகநாதர் கோவில் சாலை வரை தார்ச்சாலை அமைத்திட ரூ.42.90 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு மேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலைக்காக தோண்டப்பட்டது.

இதன்பின்பு பெரிய அளவிலான கற்கள் மட்டும் சாலை போடுவதற்காக குவிக்கப்பட்டது. இதன்பின்பு சாதாரணமாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அவ்வளவுதான் அடுத்து எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் தினந்தோறும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள், நடந்து செல்லக்கூடிய மாணவர்கள், தோட்டங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள், மற்றும் கூலிதொழிலாளர்கள் என பெரும் சிரமங்களை அடைகின்றனர். தார்ச்சாலை அமையக்கூடிய இரண்டுபுறமும் தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்டவை பல ஆயிரம் ஏக்கரில் விளைகின்றன. இதனை சரக்கு லாரிகளில் கொண்டு வர முடியவில்லை. டூவீலரில் செல்வோர் குவிக்கப்பட்ட கற்களில் மோதி கீழே விழுந்து ரத்த காயம் அடைவதும் தொடர்கிறது. எனவே உடனடியாக தார்சாலையை அமைத்திட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் நடந்து முடிந்த கிராமசபைக்கூட்டத்திலும் வலியுறுத்தினர். ஆனால் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

Related Stories: