பள்ளியின் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலைமறியல்

கம்பம், ஜன.29: பள்ளி அருகே டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் தனியார் பள்ளி அருகே அரசு மதுபானக்கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே மதுபானக்கடை திறக்கக் கூடாது என கோசமிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சுருளிஅருவி-தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் கம்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிலைமணி பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு தேனி கலெக்டரிடம் மனுகொடுக்க சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கக்கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. அதனால் கடைதிறக்க முயன்றபோது போராட்டம் செய்தோம். அரசு இங்கு கடை திறப்பதை கைவிட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: