காரைக்குடி பகுதியில் போலி பட்டாவில் நில மோசடி மோசடி மன்னர்கள் கைவரிசை

காரைக்குடி, ஜன.29:  காரைக்குடி பகுதியில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதை தொடர்ந்து போலி பட்டா தயார் செய்து நிலத்தை மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சி பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. சென்னை, மதுரை, கோவை போன்ற மெட்ரோ சிட்டிக்கு இணையாக நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள சூடாமணிபுரம், குறிஞ்சிபுரவு, சுப்பிரமணியபுரம், செக்காலை ரோடு போன்ற பகுதிகளின் நில மதிப்பு மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது. நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதால் சும்மா கிடக்கும் இடங்களை குறிவைத்து போலி பட்டா மாறுதல் உத்தரவு தயார் செய்து நிலமாசடி மன்னர்கள் வில்லங்கத்தை போட்டு அதில் காசு பார்த்து வருகின்றனர். நிலமோசடி மன்னர்கள் சொத்துக்கு உரியவர்கள் இறந்து விட்டால். அந்த சொத்தின் வாரிசுகளுக்கு தெரியாமல் சொத்துக்கு உரியவர் கிரயம் செய்து தந்தது போல் இறந்தவர்களின் கையெழுத்தை போலியாக பேட்டு உள்நாட்டு பத்திரம் தயார் செய்து விடுகின்றனர். பின்னர் ஓய்வு பெற்ற முன்னாள் தாசில்தார்கள் பெயரில் போலி கையெழுத்து, போலி அரசு முத்திரை வைத்து போலியாக பட்டா மாறுதல் உத்தரவு தயார் செய்து விடுகின்றனர். பின்னர் இதனை அதிகம் பத்திரப்பதிவு நடக்காத ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடமானம் வைத்தது போல் பதிவு செய்து சொத்தில் வில்லங்கம் இருப்பது போல் பதிவு செய்து விடுகின்றனர்.

சொத்துக்கு உரியவர்கள் தங்களின் சொத்தை விற்பனை செய்ய வில்லங்க சான்று பெற வேண்டும். அந்த வில்லங்க சான்றில் நிலமோசடிகாரர்களின் பெயர் வரும். அப்போது இதனை யாரும் வாங்கமாட்டார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சொத்துக்கு உரியவர்களிடம் இடத்தின் அன்றைய மதிப்பில் பாதி தொகையை கேட்கின்றனர். இதுபோல குறிஞ்சிபுரவு உள்பட பலவேறு பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட இடங்களை நிலமோசடிகாரர்கள் தங்கள் வசம்படுத்தி பல கோடிவரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில், தற்போது நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. இடம் வைத்திருப்பவர்கள் தங்களது இடத்தின் பத்திரம், பட்டாவை மட்டும் வைத்திருப்பார்கள் என்றாவது வந்து பார்த்தால் அவர்களது இடம் வேறு ஒருவர் பெயரில் இருக்கும். ஓய்வு பெற்ற தாசில்தார்கள் கையெழுத்து போட்டது போல போலிபட்டா மாறுதல் உத்தரவின் மூலம் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுகுறித்து தாசில்தாரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இதுபோல குறிஞ்சிபுரவு பகுதியில் மட்டும் 10 பிளாட்டுகளை பதிவு செய்துள்ளனர். அதிகாரிகள் உடந்தையுடன் இதுபோன்ற மோசடி அரங்கேறி வருகிறது என்றனர்.

Related Stories: