அகழாய்வை விரைவில் துவங்க வேண்டும் சென்னையை சேர்ந்த இஸ்லாமியர்கள் வலியுறுத்தல்

திருப்புவனம், ஜன. 29: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை விரைவில் துவங்க வேண்டும் என பார்வையிட வந்த இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசு மூன்று கட்டமும்,  மாநில அரசு இரண்டு கட்டமுமாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டன.  நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கை வெளியானதிலிருந்து கீழடி அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. உலகத்தமிழர்களின் பார்வை கீழடியின் பக்கம் திரும்பி வருகிறது.  5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகள், தாழிப்பானை, நீண்ட சுவர்கள், உறைகிணறு, சுடுமண் குழாய், பவளம், முத்திரை, விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்ட அனைத்தையும் கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்த போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து கீழடியில் நடந்து வந்த 5ம் கட்ட அகழாய்வை ஒன்றரை லட்சம் பேர் நேரில் பார்வையிட்டனர். கடந்த அக்டோபர் 13ம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறைவடைந்தது. எனினும் அகழாய்வு நடந்த இடத்தை பார்வையிட தினசரி ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். 5ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் தற்போது நில உரிமையாளர் முருகேசன் சோளம், நிலக்கடலை, எள் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார். விவசாய பணிகள் நடைபெறுவதால் நில உரிமையாளர்கள் உள்ளே செல்ல முடியாதபடி வேலி அமைத்துள்ளனர். நேற்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு பேரணிக்காக வந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கீழடி அகழாய்வு தளத்தை பார்வையிட வருகை தந்தனர். ஆனால் உள்ளே செல்ல முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘கீழடியில் நடந்த அகழாய்வு மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் விவசாயம், தொழில் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியது உலகமே அறிந்துள்ளது. அடுத்தடுத்த அகழாய்வு மூலம்தான் இன்னமும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.  எனவே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை விரைந்து துவங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

Related Stories: