ஒட்டன்சத்திரம் தருமத்துபட்டியில் மனித நேய வார விழா

திண்டுக்கல், ஜன. 29: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மனித நேய வார விழா கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வழிகாட்டுதலின்படி ஒட்டன்சத்திரம் அருகே தருமத்துப்பட்டி காளியம்மன் கோயில் சமுதாயக்கூடம் கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் யூஜின் அந்தோணி குமார் வரவேற்று, துவக்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சீமைச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட குற்ற பதிவேடு கூடம் (பொறுப்பு) டிஎஸ்பி ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இரக்கம், அன்பு, கருணை ஆகியவற்றை உள்ளடக்கி மனிதர்கள் அனைவரும் மனித நேயத்தோடு வாழ கற்று கொள்ள வேண்டும்.சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும், சாதியற்ற சமூகம் உருவாக்க வேண்டும் என்றும், மதவேறுபாடுகளை கலைத்து மனித நேயத்தோடு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, தருமத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்களின் அடிப்படை வசதி கோரிய மனுக்கள் பெறப்பட்டது.

Related Stories: