சேரன்மகாதேவியில் முதல்வர் திறந்த சார்நிலை கருவூலகம் 2 மாதமாக பூட்டிக் கிடக்கும் அவலம்

வீரவநல்லூர், ஜன. 29: சேரன்மகாதேவியில் முதல்வர் திறந்து வைத்த சார்நிலை கருவூலகம், 2 மாதமாக பூட்டிக்கிடக்கிறது. சேரன்மகாதேவி - டவுன் ரோட்டில் காந்திபார்க் அருகே வாடகை கட்டிடத்தில் சார்நிலை கருவூலகம், பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்படும் இந்த கருவூலகத்தை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியாக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சேரன்மகாதேவி - களக்காடு ரோட்டில் போலீஸ் ஸ்டேசன் அருகே புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தை கடந்த நவ.22ம் தேதி தென்காசி புதிய மாவட்டம் திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் பழனிசாமி, காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி சேரன்மகாதேவியில் நடந்த திறப்பு விழாவில் மண்டல இணை இயக்குநர் பாத்திமா சாந்தா குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு 2 மாதம் முடிவடைந்த நிலையில், இதுவரை புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன், சொந்த கட்டிடம் இருந்தும் தனியாருக்கு வாடகை வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சார்நிலை கருவூலக கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories: