அடிப்படை வசதிகள் கேட்டு மானூர் ஒன்றிய ஆபீசில் திரண்ட கிராம மக்கள்

மானூர், ஜன. 29: மானூர் ஊராட்சி ஒன்றியம், 41 பஞ்சாயத்துகள் அடங்கிய பெரிய ஒன்றியமாகும். 3 ஆண்டுகளுக்கு மேல் இதன் நிர்வாகம், ஒன்றிய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் உள்ளன. கிராம பஞ். வட்டார வளர்ச்சி அலுவலரின் கீழ் பல தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பஞ். நிர்வாகம் செயலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் 41 ஊராட்சிகளிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் பல்வேறு குறைகள் நிவர்த்தி செய்ய இயலாமல் பரிதாப நிலையில் உள்ளன. இதனால் கிராமத்தினர் தங்கள் குறைகளை எங்கு சொல்வது என்று தெரியாமலும், ஊராட்சி செயலர்களிடம் கூறினாலும் நடைமுறைக்கு வராமலும் உள்ளதாக புலம்புகின்றனர். இந்த ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை எனக்கூறி நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்டோர், ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அமுதா, வெங்கடேஷ் ஆகியோர் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு புதூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே தனியாக குடிநீர் தொட்டி ஏற்படுத்தி முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். சுகாதார வளாகமோ, குப்பை தொட்டிகளோ அமைக்கப்படவில்லை. இதனால் எந்த நோய் தாக்கினாலும் முதலில் எங்கள் கிராமம் பாதிக்கப்படுகிறது.எனவே திருவள்ளுவர் நகரில் சுகாதார வளாகம் அமைத்து தருவதுடன், குப்பைகள் தொட்டிகள் வைத்து அப்புறப்படுத்த வேண்டும். சாலை, மின்விளக்கு, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். அரசு அறிவிக்கும் நலத்திட்ட திட்டங்களும் முறையாக எங்களுக்கு கிடைக்கிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.சிறுகுழந்தைகளை சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள புதூர் காலனி அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வருகிறோம். எனவே எங்கள் பகுதியிலேயே அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும், என்றனர்.

Related Stories: