வேலூர் தோட்டப்பாளையம் அரசு நிதியுதவி பள்ளியில் மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் 40 பேர் பங்கேற்பு

வேலூர், ஜன.29: வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசு நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் நடந்த மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் காகிதப்பட்டறை நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 40 மாணவர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில், மாணவர்கள் தங்களது பள்ளிகளில் இருந்து மற்றொரு பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளுதல், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துதல், வரலாற்று நினைவிடங்களை கண்டு ரசிக்க பயணம் மேற்கொள்ளுதல் போன்றவைகள் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதன்படி, வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் நேற்று தோட்டப்பாளையம் சர்வஜன நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் நடந்த மாணவர்கள் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பள்ளி தலைமையாசிரியர் பாலகோபால் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் வேணுகோபால், கல்வி உலகம் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர், பள்ளி வளாகத்தில் கல்வியின் அவசியம், வரலாற்று புராணக் கதைகள் ஆகியவற்றை தெருக்கூத்து கலைஞர்கள் பாடல்களை பாடி நடித்துக் காட்டினர். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியம், வினாடி வினா போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் வரலாற்று புகழ்மிக்க வேலூர் கோட்டைக்கு காணச் சென்றனர். பின்னர், மாணவர்கள் அனைவருக்கும் ₹150 மதிப்புள்ள பாடப்புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினர்.

Related Stories: