வேலூர் பழைய பைபாஸ் சாலை தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் மாசுபடும் சுற்றுச்சூழல்

வேலூர், ஜன.29: வேலூர் பழைய பைபாஸ் சாலையில் பொது இடங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு கரும்புகை மூட்டம் சூழ்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பழைய பைபாஸ் சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், கிடங்குகள், தொழில் நிறுவனங்கள், மெக்கானிக் ஷெட்கள், லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பாடி கட்டும் கூடங்கள் இயங்கி வருகின்றன. மெக்கானிக் ஷெட்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அகற்றப்படும், பிளாஸ்டிக் கழிவுகள், ரசாயன ஆயில் கலந்த துணிகள் ஆகியவை சாலையோரம் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை சாலை முழுவதும் பரவுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத நிலையில் விபத்துகள் ஏற்படுகிறது.

அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள் நாள்முழுவதும் எரிந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் லாரி மெக்கானிக் ஷெட்களில் இருந்து வெளியேறும் பஞ்சு, தேங்காய்நார் கழிவுகள் தினமும் சேகரித்து வைத்து மாலை 3 மணிக்குமேல் வரும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தொழில் நிறுவனத்தினர் இந்த விதிகளை பின்பற்றாமல் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். கரும்புகையால் பைபாஸ் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், உடல்நிலை பாதித்த முதியவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: