தாரமங்கலம், ஜன.29: தாரமங்கலம் அருகே பள்ளி குழந்தைகள் ஆபத்தான நிலையில் ரயில்வே பாதையை கடக்கும் நிலையில், அசம்பாவிதம் நிகழும் முன்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மானத்தாள் கிராமம் கரட்டூர் வழியாக சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில்வே பாதை பல ஆண்டுகளாக சேவையில் இருந்து வருகிறது. தற்போது, இந்த வழியாக இருவழி ரயில்வே பாதை பணி நடைபெற்று வருகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள சிற்றூர்களான மானத்தாள் மற்றும் கோவிலூர், உடையான்குறை, மோட்டூர், கண்காணிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு இந்த ரயில்வே பாதையை கடந்து கரட்டூர் பகுதிக்கு வந்து பேருந்து மற்றும் அனைத்து தேவைகளையும் அடைய வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.