இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் இல்லாததால் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

சேலம், ஜன.29: இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் சென்னை, சேலம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்று, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்  மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும்  இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள் பலர்,  பணி நிறைவு பெற்றுள்ளனர். அதே நேரத்தில் காலிபணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சேலத்தில் இதனால் 2 பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி,  தேக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டுகளில் தலா 15 பேர் என, 60  மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், இந்த மையத்தில் இருந்து ஆண்டுதோறும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று  மாநில, தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

சேலம் பயிற்சி மையத்தில், கைப்பந்து பயிற்சியாளரே, மையத்தின் பொறுப்பாளராகவும் கூடுதலாக பணியாற்றி வருகிறார். இதேபோல் கபடி பயிற்சியாளராக இருந்தவரும் பணிநிறைவு பெற்றுவிட்டார். தற்போது அவரே பணியை தொடர்ந்து வருகிறார். சேலம் பயிற்சி மையத்தில் கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கு நிரந்தரமாக பயிற்சியாளர்கள், இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த இரு விளையாட்டுகளுக்கும் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிரிவுகளில் நடப்பாண்டில் சேர விரும்பும் மாணவர்களின் கனவு தகர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். இவ்வாறு விளையாட்டு ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: