வேகமாக பரவுகிறது கொரோனோ வைரஸ் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு

சேலம், ஜன.29: கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ், இபோலா வைரஸ், பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் உலகை தாக்கி அச்சுறுத்தி வருகின்றன. தற்போது அந்த வரிசையில் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. இதனால் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கபடாததால் சீனாவில் இருந்து வருவோரை, அனைத்து நாடுகளும் கண்காணித்து மருத்துவப் பரிசோதனை செய்யவும், அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா, தொழில் மற்றும் கல்வி ரீதியாகவும் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்திய வெளியுறவு அமைச்சகம் அவர்களை மீட்டுவர, நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 11 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அறிகுறிகளுடன் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சீனாவிலிருந்து நாடு திரும்புவர்களை கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறையினர் மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கடலோர பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுவை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தமிகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவனைக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘‘கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு பிரிவுகள் அமைத்து தனி மருத்துவக் குழுவையும் நியமிக்க வேண்டும்,’’ என்று  மருத்துவமனை டீன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகளாக தொடர்ந்து காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடம்பு வலி, உடல் சோர்வு, ஆகியவை காணப்படும். மேலும், நோயாளிகளுடன் தொடர்பு கொண்டாலும் ஏற்படும். இந்த வைரஸ் பரவுதை தடுக்க அடிக்கடி கைகளை நன்கு கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நுரையீரல் மருத்துவர், பொது மருத்துவ மருத்துவர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் யாரேனும் பாதிக்கப்பட்டு வந்தால் சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் தயாராக இருக்க அறுவுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் குறித்து மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: