தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவராக சின்ராஜ் எம்பி மேலும் 3 ஆண்டுக்கு நீடிப்பார்

நாமக்கல், ஜன. 29: தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவராக, சின்ராஜ் எம்பி மேலும் 3 ஆண்டுக்கு நீடிப்பார் என பொதுக்குழுவில் திடீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுளளது. நாமக்கல்லில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நிறுவன தலைவர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார்.கூட்டத்தில், தலைவர் சின்ராஜ் எம்பி பேசியதாவது: கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க மத்திய அரசின் மூலம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறேன். சங்கத்துக்கு எதிராக செயல்பட்டவர்களை சங்கத்தில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது. அதன்படியே 8 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஒரு சங்கத்தில் மட்டுமே பொறுப்பில் இருக்க வேண்டும். இரண்டு சங்கத்தில் இருந்து கொண்டு தெரிவிக்கும் கருத்தால் எந்த பயனும் ஏற்படாது. மீண்டும் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. கடந்த 3 ஆண்டாக என்னோடு இணைந்து அனைத்து பொறுப்பாளர்களும் சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றனர். இவ்வாறு சின்ராஜ் பேசினார்.

கூட்டத்துக்கு பின் சங்கநிறுவன தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான நல்லதம்பி நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது கோழிப்பண்ணை தொழில் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது.இந்த நிலையில் தற்போதைய தலைவர் சின்ராஜ் எம்பி தொடர்ந்து தலைவர் பொறுப்பை வகித்தால்தான் தொழிலை காப்பாற்றமுடியும். எனவே தற்போது உள்ள பொறுப்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுக்கு தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்கள். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் சங்கவிதிமுறைப்படி நிறுவன தலைவராக தொடர்ந்து நீடிப்பேன். பொதுக்குழுவில் தற்போது உள்ள நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் சங்கத்துக்கு தேர்தல் நடத்தவேண்டிய தேவையில்லை. பதவியேற்பு விழா எப்போதும் நடத்தவேண்டும் என தலைவரே முடிவு எடுப்பார். இவ்வாறு நல்லதம்பி தெரிவித்தார். கூட்டத்தில், பொருளாளர் இளங்கோ, துணைச்செயலாளர் ஆனந்த், துணைத்தலைவர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாக குழு உறுப்பினர் நீக்கம் ஏன்?

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தில், தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் 16 நிர்வாக குழு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கிறது. இதில் விஜய் என்ற நிர்வாக குழு உறுப்பினர் சங்கத்தின் விதிமுறையை மீறி செயல்பட்டதால் அவரை சங்கத்தில் இருந்து நீக்கியதாக தலைவர் சின்ராஜ் எம்பி நிருபர்களிடம்  தெரிவித்தார். எனவே அந்த ஒரு பதவிக்கு மட்டும் புதியதாக ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக எம்பி சின்ராஜ் கூறினார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தில், 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சங்கத்தில் 20 ஆண்டுக்கு மேலாக தலைவராக இருந்த வந்த நல்லதம்பி கடந்த தேர்தலில் போட்டியிடமால் புதிய நபர்களுக்கு வாய்ப்பு அளித்தார். அப்போது சின்ராஜ் எம்பிக்கு நல்லதம்பி ஆதரவு அளித்து அவரை வெற்றி பெற வைத்தார். தற்போதும், அதே பாணியில் சின்ராஜ் எம்பியை மீண்டும் தலைவராக்கி பொதுக்குழுவில் திடீர் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார். இது கோழிப்பண்ணையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: