கிருஷ்ணகிரியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான இரண்டாம் கட்ட ஒருநாள் பயிற்சி நேற்று கிருஷ்ணகிரி வட்டார வளமையத்திற்கு உட்பட்ட குறுவள மையங்களில் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். பிடிஏ தலைவர் வெங்கடாஜலம், ஆர்காட் தொண்டு நிறுவன இயக்குநர் முரளி மற்றும் செயலாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறுவள மையத்திற்கு உட்பட்ட 18 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் 90 பெற்றோர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். இதே போல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி, அணை சின்னமேலுப்பள்ளி, எம்.சி.பள்ளி, ஆலப்பட்டி மற்றும் கனகமுட்லு அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், கங்கலேரி மற்றும் மாதேப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் இந்த பயிற்சி வகுப்புகள் நடந்தன.

இதேபோல் ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். இதில் 13 பள்ளிகளில் இருந்து 78 பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் கருத்தாளர்களாக அறிவியல் ஆசிரியர்கள் சங்கர், கயல்விழி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மைகுழு மற்றும் செயல்திட்டம், சமூக தணிக்கை, பள்ளி உட்கட்டமைப்பு, பள்ளி சுகாதாரம், குழந்தைகளின் உரிமைகள், பாலின சமத்துவம், பேரிடர் மேலாண்மை, கல்வியில் புதுமை, பள்ளி மதிப்பீடு, தர கண்காணிப்பு முறைகள் என்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமில் 16 குறுவள மையங்களில் இருந்து தலா 6 பேர் என 96 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு, தரமான கல்வி, பள்ளி மேம்பாடு திட்டம், சமூக தணிக்கை, பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறுவளமைய தலைமை ஆசிரியர் துரை, ஆசிரியர் பயிற்றுனர்கள் கீதா, நளினி மற்றும் வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன் கலந்து கொண்டார்.

Related Stories: