ஓட்டல்கள், மளிகைக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சேலம், ஜன.29: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்  பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தள்ளுவண்டி, ஓட்டல், மளிகைக்கடைகளில் தாராளமாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில், கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி  முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதார அதிகாரிகளும், இதேபோல் நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஓட்டல், மளிகைக்கடை, காய்கறிக்கடை உள்பட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இந்த நிலையில் உத்தரவு அமல்படுத்தி ஓரு ஆண்டு ஆகியும் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கமுடியவில்லை. ஆனால் ஓட்டல், தள்ளுவண்டிகடை, மளிகைக்கடைகள், ஸ்வீட்ஸ்டால் உள்பட பல்வேறு கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவ்வப்போது சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தாலும், தற்போது அதிகாரிகள் ஆய்வில் சுணக்கம் ஏற்பட்டதால், வியாபாரிகள் தாரளமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தொடங்கிவிட்டனர்.  இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தபிறகு பொதுமக்கள் ஓட்டல்களுக்கு பாத்திரம் எடுத்துச்சென்றனர். காய்கறிக்கடை, மளிகைக்கடைகளுக்கு துணிப்பை கொண்டு சென்றனர்.

இறைச்சிக்கடையில் கூட பாத்திரம் கொண்டு சென்றனர். 90 சதவீத மக்கள் மாறினர். இன்னும் பத்து சதவீதம் பேர் தான் பொருட்களை வாங்க இன்னும் பிளாஸ்டிக் பையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்திய பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு 95 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் ஆய்வு தான். தற்போது ஆய்வில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதே நிலை சென்றால் மீண்டும் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: