தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உடுமலை, ஜன.29: மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தென்னையை 800க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்கினாலும், சமீப காலமாக அமெரிக்காவின் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களினால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தோப்புகளில் எல்லாம் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பூச்சிகள் தாவரங்களை கடித்து சாப்பிடும் புழுக்கள் ஆகும். ஆனால் இந்த வகை பூச்சியானது சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இதன் வாய் ஊசி போன்று இருக்கும். இது தென்னை இலையின் பச்சையம் முழுவதையும் உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. இதனால் தென்னை மரங்கள் மகசூல் இழப்பிற்கு ஆளாகின்றன. இது முட்டைகளை சுருள் சுருளாக வைக்கும். லேசான மஞ்சள் கலரில் இருக்கும். இதன் மேல் மெழுகு போன்ற பூச்சு இருக்கும். இதுவே, இதன் தாக்குதலுக்கு அறிகுறியாகும். இலையின் அடிப்பாகத்தில் இது இருக்கும்.

சேதம் அதிகமாக இருக்கும்போது, வேப்பெண்ணையை ஒட்டும் திரவத்தோடு ஒரு லிட்டருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது தாவரப்பூச்சிக் கொல்லியான அசாடிராக்டின் மருந்தை ஒரு லிட்டருக்கு 2 முதல் 5 மில்லி சேர்த்து பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் நன்றாக படுமாறு தெளிக்கவும்.வெள்ளை ஈக்களை உண்ணும் இரை விழுங்கியான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முட்டைகளை ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில், வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறையிலும், மேலும் என்கார்சியா எனப்படும் ஒட்டுண்ணி ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். இம்முறைகளை ஒருவர் மட்டும் கடைபிடித்தால் போதாது. அனைவரும் ஒருங்கிணைந்து செய்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் ஒரு தோப்பில் இருந்து மற்றொரு தோப்புக்கு எளிதில் இனப்பெருக்கம் செய்துவிடும்.

எனவே, விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை பல்கலை ஆராய்ச்சி நிலையங்களை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: