கூடலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

கூடலூர், ஜன.29: கூடலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி  20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதி நாளான 27ம் தேதி போக்குவரத்து துறை கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையம் சார்பில் கூடலூர் பஜாரில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன் பேரணியை  கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொழிற்பயிற்சி மைய முதல்வர் சாஜி,  கூடலூர் காவல் உதவி ஆய்வாளர்-பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கலந்து கொண்டனர். இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணி கூடலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முடிவடைந்தது.    இதே போல் கூடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கூடலூர் பஜாரில் பேரணியாக வந்த காவல்துறையினர் மற்றும்  பொதுமக்கள்  உயிர் பாதுகாப்பிற்கு  தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

Related Stories: