தோட்டத்தில் கன்றுகுட்டி, ஆடுகளை கொன்ற புலி

பொள்ளாச்சி, ஜன.29: பொள்ளாச்சி அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த புலி, கன்றுகுட்டி, ஆடுகளை கடித்து கொன்றது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சேத்துமடை, போத்தமடை, ஆயிரங்கால் குன்று உள்ளிட்ட இடங்களில், யானை காட்டு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்தாண்டு சேத்துமடை அருகே உள்ள தோட்டங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், அப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனைமலையை அடுத்த சேத்துமடை அருகே உள்ள ஆயிரங்கால் குன்று எனும் பகுதியில் சங்கர் என்பவரது தோட்டத்து தொழுவத்தில் ஒரு கன்றுகுட்டி, 5 ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை திடீரென மறைவிடத்திலிருந்து வந்த புலி ஒன்று, முதலில் கன்றுகுட்டியை கடித்து கொன்றது. அதன்பின், அங்கிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக கடித்து குதறியது. ஆட்டின் சத்தம் கேட்டு, தோட்டத்து வீட்டில் இருந்த அப்பாதுரை என்பவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு ஆட்டை, புலி கடித்து குதறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து தப்பி ஓடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வந்து பார்த்தபோது கன்றுக்குட்டி, ஆடுகள் இறந்து கிடந்தன.

தொழுவம் மற்றும் தோட்ட பகுதியில் ஆங்காங்கே புலியின் கால்தடம் இருந்ததை பார்த்தனர். புலியை கண்காணித்து பிடிக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்காளியாபுரம், பெரும்பதி பகுதியில் மர்ம விலங்கு புகுந்து கால்நடைகளை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுகுட்டி, ஆடுகளை ஒரே நேரத்தில், புலி வேட்டையாடி கொன்ற சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம்  கூறுகையில், `சேத்துமடை அருகே உள்ள விவசாயி தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுகுட்டி, ஆடுகளை புலி கடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானை அல்லது அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. தற்போது புலி நடமாட்டமும் இருப்பது எங்களால் நம்ப முடியவில்லை. இருப்பினும், கால்தடத்தை பார்க்கும்போது புலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வனத்தை ஒட்டி தோட்டம் உள்ளதால், எளிதில் விலங்குகள் வந்து செல்ல வாய்ப்பாக உள்ளது. தற்போது, புகுந்துள்ள புலி எங்குள்ளது? என கண்டறிய, 12 பேர் கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைகளை கொன்ற புலியை  விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

பெட்டி செய்தி

கேமரா மூலம் கண்காணிப்பு

சேத்துமடை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்த புலி, அங்கிருந்த கால்நடைகளை கொன்று தப்பியது. அந்த புலி எங்குள்ளது? என தெரியாததால், இரவு நேரத்தில் மீண்டும் தோட்டத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதையடுத்து, வனத்திலிருந்து தோட்டத்திற்கு வரும் இடங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வருவதாக  வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: