தமிழக கோயில் யானைகளுக்கு உடல் எடையை குறைக்க மருத்துவ குழு

மேட்டுப்பாளையம், ஜன.29: தமிழக கோயில் யானைகளுக்கு உடல் எடையை குறைக்க மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர், நேற்று தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் யானைகளை பரிசோதனை செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையோரத்தில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடந்து வருகிறது. இதில், தமிழக கோயில்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 26 யானைகளும், பாண்டிச்சேரியை சேர்ந்த இரண்டு யானைகளும் என 28 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன. இந்த முகாம் கடந்த டிச.15ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும் 31ம் தேதியுடன் முகாம் நிறைவு பெறுகிறது. இந் நிலையில், யானைகள் உடல்நிலை குறித்த பரிசோதனை நேற்று நடந்தது. இதில், கேரளாவைச் சேர்ந்த  யானைகள் சிறப்பு மருத்துவர் சுனில் மற்றும் மருத்துவ குழுவினர் 28 யானைகளையும் பரிசோதனை செய்தனர்.

அதன்பின், நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

48 நாட்கள் நடைபெறும்  யானை புத்துணர்வு முகாமை பொருத்தவரை அனைத்து யானைகளுக்கும் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இதில் அனைத்து யானைகளும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறு, சிறு உடல் உபாதைகள் மட்டுமே யானைகளுக்கு உள்ளது. அதுவும் தொடர்ந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணமாக கூடிய நோய்தான். யானைகளை பொருத்தவரை உடல் எடை தான் பிரச்னையாக உள்ளது. அதை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காடுகளில் வளர்ந்த முதிர்ந்த யானைகள் 3 முதல் 3.5 டன் எடை இருக்கும். ஆனால், கோயில் யானைகளை பொருத்தவரை இளம் வயது யானையாக இருந்தாலும் அதன் எடை 4 முதல் 4.5 டன்னாக உள்ளது.

எனவே, இந்த எடை உள்ள காரணத்தினால் நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. எடை அதிகரிக்க காரணம், கோயிலில் யானைகளின் உணவு பழக்கமும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததுதான். எனவே, கோயில்களில் தற்போது வழங்கும் உணவு முறைகளை மாற்றி சிறிய அளவிலான தானியங்கள் கலந்த அரிசி உணவுடன் அதிக பசுந்தீவனங்களை உள்ளடக்கிய சமச்சீர் உணவுகளை அதிகம் யானைகளுக்கு கொடுப்பதாலும், நடைபயிற்சி மூலமும் உடல் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதற்காக, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தமிழ்நாடு வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரி மனோகரன், கால்நடை மருத்துவர் சுகுமார், கேரள மாநிலத்தின் கால்நடைத்துறை மருத்துவர் சுனில், மற்றும் அண்ணாதுரை ஆகியோரை  கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் முகாமை விட்டு அந்தந்த கோவில்களுக்குச் சென்றாலும் தொடர்ந்து யானைகளை கண்காணிக்கவும் பாகன்களுக்கு அறிவுரை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ வல்லுநர் குழு அந்தந்த கோயில்களுக்குச் சென்று யானைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: