உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்படும் 60 டாஸ்மாக் பார்கள்

கோவை, ஜன. 29:  கோவையில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் 60 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவது ெதரியவந்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உணவு பொருட்களை கையாளும் நிறுவனங்கள் உரிமம், பதிவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை பெரிய அளவிலான உணவகம் முதல் தள்ளுவண்டிகள் கடை வரை பெற வேண்டும். மேலும், அரசின் டாஸ்மாக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்டவையும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்கப்படும்.  இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் ஏராளமான டாஸ்மாக் கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளில் சுண்டல், கிழங்கு வகைகள், நிலக்கடலை, சில்லி சிக்கன், மீன் வறுவல், ஆம்லெட் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இவை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்ட வடக்கு மேலாளருக்குட்பட்ட பகுதியில் செயல்படும் 158 டாஸ்மாக் கடைகளில் 60 கடைகள் உணவு பாதுகாப்பு உரிமத்தை கடந்த 3 மாதங்களாக புதுப்பிக்காமல் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் உரிமம் இல்லாமல் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடிமகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், “டாஸ்மாக் கடைகள் டெண்டர் எடுத்தவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர்களின் தகவல்களை அளிக்கவும், பதிவு செய்தவர்களின் விரவங்களை அளிக்கவும் டாஸ்மாக் நிர்வாகத்தினரிடம் பேசியுள்ளோம். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். புதுப்பிக்காமல் உள்ளவர்கள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பார்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு நடத்தப்படும்” என்றார்.

Related Stories: