வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த புதிய வகை பூஞ்சாணம் கண்டுபிடிப்பு

ஈரோடு, ஜன. 29:  தென்னை மரங்களை தாக்கி வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த புதிய வகை பூஞ்சாணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வந்த வெள்ளை ஈக்கள் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், நம்பியூர், அரச்சலூர், கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை தாக்கி வருகிறது. ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் ஈக்களினால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கரும்பூஞ்சாணமாக ஓலைகளில் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இதனால் தென்னைகளில் மகசூல் பாதியாக குறைந்துவிடுவதாகவும், குறிப்பாக தேங்காய்கள் போதிய வளர்ச்சி இன்றி சிறிய அளவில் உள்ளதாகவும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோவை வேளாண்துறை அதிகாரிகள், பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய பூச்சிகள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் புதிய வகை பூஞ்சாணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பூஞ்சாணம் தென்னையை தாக்கி வரும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெங்களூருவை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் சிவக்குமார், பூச்சியியல் துறை விஞ்ஞானி டாக்டா் செல்வராஜ், மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டா் கண்ணன் ஆகியோர் கூறியதாவது: தென்னை மரங்களை தாக்கி வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஐசாரியா என்ற வகையான புதிய பூஞ்சாணத்தை நீரில் கரைத்து தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கப்படும் போது வெள்ளை ஈக்களின் முட்டை, குஞ்சு, ஒட்டி இருக்கும் தாய் பூச்சிகள் அனைத்தின் மீதும் பூஞ்சாண வித்துக்கள் பரவி அவற்றை அழித்து விடுகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக கோபி வட்டாரத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் பரிச்சாத்தியமாக இந்த புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த பூஞ்சாண வித்துக்கள் வளர்ந்து ஓலையில் அதிகமாக உள்ள வெள்ளை பூச்சிகளை அழித்துவிடும். இவ்வாறு கூறினர்.

Related Stories: