தொழிலாளி வெட்டிக்கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

ஈரோடு,  ஜன. 29:   ஈரோடு  சூரம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மகன் நாகராஜ் (25). இவர் நேற்று முன்தினம்  ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் காளிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள  வயல்வெளியில் மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு  கிடந்தார். இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு  செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், ஈரோடு டவுன் டி.எஸ்பி. ராஜூ  உத்தரவின்பேரில், கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் மர்மகும்பலை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று கொலை வழக்கில்  தொடர்புடையதாக 3 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கொலையான நாகராஜ், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் சத்திரம்  போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் முனீஸ் என்ற வாலிபரை கொலை செய்ததாக  அவர் மீது வழக்கு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல்வேறு அடிதடி  சம்பவங்களிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. நாகராஜின் நண்பர்களுக்கும், ஈரோட்டை  சேர்ந்த மதன் தலைமையிலான மற்றொரு கும்பலுக்கும் முன்விரோதம்  இருந்துள்ளது.

கடந்த 26ம் தேதி மதன் கும்பல் அழைத்ததன்  பெயரில் கஞ்சா, மது அருந்துவதற்காக கே.ஏ.எஸ். நகர் வாய்க்கால்  கரைக்கு நாகராஜ் அவர்களது நண்பர்கள் சரவணன், கணேஷ் ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக சரவணன், கணேஷ் தப்பி  சென்றனர். இதைத்தொடர்ந்து நாகராஜை மதன் தலைமையிலான 5 பேர் கொண்ட  கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கொலை  செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு  நடத்தப்பட்டுள்ளது. இது நாகராஜை கொலை செய்ய போடப்பட்ட திட்டமா? அல்லது  அவரது நண்பர்களுக்கு போடப்பட்ட திட்டமா? என்பது குறித்து விசாரணை நடத்தி  வருகிறோம். சம்பவ இடத்தில் கல் குவியலுக்கு அடியில் மறைத்து  வைக்கப்பட்ட பட்டா கத்தியை கைப்பற்றியுள்ளோம். தப்பி சென்ற நாகராஜ்  நண்பர்கள் சரவணன், கணேஷ் ஆகியோர் நாகராஜின் தம்பி மோகனிடம் தெரிவித்ததன்  பெயரில், மோகன் நேற்று (திங்கள்கிழமை) சம்பவ இடத்திற்கு சென்று அவரது அண்ணன்  கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினோம். தற்போது கொலையாளிகளை பிடிக்க  இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: