டெம்போ டிரைவர்களை மிரட்டி தாக்கி மாமூல் கேட்கும் ரவுடிகள்

புதுச்சேரி, ஜன. 29:  புதுவை பாரதமாதா விக்ரம் டெம்போ உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் முருகையன், கோரிமேடு காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் அளித்துள்ள புகார் மனு: சோனாம்பாளையம் வழியாக ஐயங்குட்டிபாளையம் வரை இயங்கும் டெம்போக்களை இயக்கும் ஓட்டுநர்களிடம் ராஜீவ்காந்தி சிக்னல் முதல் ஐயங்குட்டிபாளையம் வரை ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதி வழியாக இயக்கும் டெம்போ ஓட்டுநர்களிடம் கட்டாய மாமுல் கேட்டு மிரட்டி வருகிறார்கள். இதனால் அவ்வழியாக டெம்போக்களை இயக்க ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபற்றி ஓட்டுநர்களிடம் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் கடந்த 22ம் தேதி கதிர்காமம் கலை அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில் ரவுடிகள் டெம்போவை வழிமறித்து மாமுல் கேட்டு மிரட்டி ஓட்டுநர் மாமுல் கொடுக்க மறுத்ததால் அவரை வலதுபுறம் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். இரும்பு பைப்பாலும் தாக்கியுள்ளனர். டெம்போ முன்பகுதி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியும் உள்ளனர். இது சம்பந்தமாக புகார், தங்கள் காவல்நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

இச்சம்பவத்தை நேரில் கண்ட பயணிகள் பீதி அடைந்தும், கலக்கத்தில் டெம்போவில் பயணிக்கவே அச்சத்தில் உள்ளார்கள். ரவுடிகளின் மிரட்டலுக்கு பயந்து ஓட்டுநர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க தயங்குகின்றனர். எனவே, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் அச்சத்தையும், பயத்தையும் போக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: