தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கடலூர், ஜன. 29: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் பேசுகையில், தொழுநோய் நாள்பட்ட நோய் என்றும், சற்றே முகம் சுளிக்க வைக்கும் நோய் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். இப்போதும்

இதுபோல் எண்ணுபவர்களும் உள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தாரையும் பலவகையில் பாதிப்படையச் செய்கிறது. இது பரம்பரை வியாதியல்ல. தற்போது, நமது மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 0.34 நபர் என்கிற விகிதத்தில் உள்ளது.

தொழுநோய் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த தற்போது ஜனவரி 30ம் தேதி முதல் நடை பெறும் இரு வார ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் விழிப்புணர்வு பேரணிகள்,  தோல் சிகிச்சை முகாம்கள், தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்கள், தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. ஜனவரி 30ம் தேதி கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டமும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக ஸ்பர்ஷ் தொழுநோய்  ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கையேட்டை ஆட்சியர் வெளியிட்டார். தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) சித்திரைச்செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரம்) கீதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முனைவர் பழனி, மாவட்ட நலக்கல்வியாளர் பொன்ராம் ரத்தினவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: