நாங்குநேரி சுங்கசாவடி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெல்லை, ஜன.28: நாங்குநேரி சுங்கசாவடியில் பயணிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாங்குநேரி சுங்கசாவடியில் நேற்று முன்தினம் கட்டணம் வசூல் தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஷேக் முகம்மது தலைமை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மாவட்ட நிதி செயலாளர் தமிழ்மணி, இளம்புலிகள் அணி செயலாளர் முகேஷ் வள்ளுவன், மாவட்ட கொள்கை பரப்பு துணை செயலாளர் தாழை சுந்தர், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் உமர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் இரணியன், இந்திய தவ்ஹித் ஜமாத் ஏர்வாடி சித்திக் உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து அளித்த மனுவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: