தென்னை நார்கழிவை மக்க வைப்பது எப்படி?

கடலூர், ஜன. 28: வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் வட்டாரம் சங்கொலிக்குப்பம் கிராமத்தில் ராமலிங்கம் என்ற முன்னோடி தென்னை விவசாயியின் வயலில் தென்னை நார் கழிவை மக்க வைத்து உரமாக்குவது குறித்த செயல்விளக்கம் நடத்தப்பட்டது. தென்னை நார் கழிவுகளை 4 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு 3 அங்குல உயரத்திற்கு பரப்பியபின் நன்றாக நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டது. பின் 1 கிலோ யூரியாவை இந்த அடுக்கின் மேல் தூவப்பட்டது. இதற்கு அடுத்து இரண்டாம் அடுக்காக தென்னை நார் கழிவு பரப்பப்பட்டது. இதன் மேல் பிளிரோட்டஸ் பூசன வித்துக்கள் பரப்பப்பட்டது. இதேபோல் தென்னை நார்கழிவு மற்றும் யூரியா அடுத்த அடுக்கில் பரப்பப்பட்டது. இதன் மேல் மற்றும் ஒரு அடுக்கில் நார்கழிவு மற்றும் பூசன வித்து பரப்பப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த அடுக்குகளில் யூரியாவையும், பூசன வித்துக்களையும் மாறி மாறி பரப்பப்பட்டது. இந்த கழிவுக்கு வியலை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட ஆலோசனை அளிக்கப்பட்டது. இதனால் புதிய காற்று உட்சென்று ஏற்கனவே அங்கு உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுகிறது. இந்த மட்கவைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில் மட்கவைத்தலுக்கு உதவும் நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு பிராணவாயு அவசியம். எனவே குவியலை கிளறிவிடுதல் மறைமுகமாக நல்ல காற்றோட்டத்திற்கு உதவுகிறது.

மட்கிய நார்கழிவினை மண்ணில் சேர்ப்பதால், மண்ணின் பண்புகள், உழவு ஆகியவை மேம்படுகின்றன. இது மணற்பாங்கான மண்ணின் கடினத்தன்மையை அதிகப்படுத்துகிறது. மற்றும் களிமண்ணை காற்றோட்டமுள்ளதாக்குகின்றது. மண் துகள்களை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி, மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது. இந்த மட்கிய உரத்தில் அனைத்து தாவர சத்துகளும் இருப்பதால், இது செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றுகிறது. மட்கிய உரமாதலால், இது மண்வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் தலைமையில் நடைபெற்ற செயல் விளக்கத்தில் முன்னோடி விவசாயி ராமலிங்கம் இலவசமாக யூரியா மற்றும் பிளிரோட்டஸ் பூசன வித்துக்களை வழங்கி தென்னை நார் கழிவு மக்கு உரத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த செயல் விளக்கத்திற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சுஜி, சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் சங்கரதாஸ் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன் அருண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: