கூலி ஆட்கள், இயந்திரம் தட்டுப்பாட்டால் தள்ளிப்போகும் நெல்பயிர் அறுவடை கதிர் முற்றி வயலில் உதிரும் அவலம்

கீழ்வேளூர், ஜன.27: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நெல் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததாலும், இயந்திரம் பெல்ட்வீல் இயந்திரம் தட்டுப்பாடு காரணமாக அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு அக்டோபர் 10ம் தேதி வரை ஆற்றில் தடுப்பணை கட்டும்பணி, தூர் வாரும் பணி என பல்வேறு காணங்களை கூறி தண்ணீர் வராமல் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடையில் மழை பெய்யாத நிலையில் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் பெய்த மழையை கொண்டு விவசாயிகள் கோடை உழவு செய்தனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 15ம்தேதி வாக்கில் 80 சதவித நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். மற்ற விவசாயிகள் நடவு பணி செய்திருந்தனர். இந்த ஆண்டு குலைநோய், ஆனை கொம்பன் பூச்சி தாக்குதல், புகையான் பூச்சி தாக்குதல், உர தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளும், அதனால் பண செலவும் அதிகமானது. இந்நிலையில் தற்போது கீழ்வேளூர் பகுதியில் சாம்பா சாகுபடி செய்யப்பட்ட நீண்டகால, மத்தியகால, குறுகியகால நெல் ரக பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

அறுவடைக்கு தயாரான நெல் பயிரை தற்போது அறுவடை செய்தால் மகசூல் குறைவாக உள்ளதால் போதிய கூலி கிடைக்காது என்பதால் அறுவடைப் பணியில் ஆட்கள் ஈடுபடுவதில் தயக்கம் காட்டுவதால் ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன் வரை பெய்த மழையால் வயல்களில் ஈரம் ஏற்பட்டு வயல்கள் காயாமல் சேறாக உள்ளது. பொதுவாக அறுவடை இயந்திரங்கள் டயர் வீல் இயந்திரம், பெல்ட் வீல் இயந்திரம் சம அளவில் வரும். வயல்களில் ஈரம் ஏற்பட்டு சேறாக உள்ளதால் கீழ்வேளூர் பகுதியில் டயர் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சேற்றில் இறங்கி அறுவடை செய்யும் இயந்திரமான பெல்ட் வீல் கொண்ட அறுவடை இயந்திரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆத்திரா, தெலங்கானா போன்ற பகுதியில் இருந்தும் காவிரி டெல்டா பகுதிக்கு பெல்ட் இயந்திரம் குறைந்த அளவில் வந்துள்ளதால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் கீழ்வேளூர் பகுதி விவசாயிகள் உள்ளனர்.

தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் கதிர்கள் முற்றியுள்ள நிலையில் இனியும் கால தாமதமானால் கதிரில் நெல்கள் தானாக கொட்டி மகசூல் மேலும் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். மகசூல் குறைவால் கூலி குறைவாக கிடைக்கும் என்ற நிலையால் ஆட்கள் அறுவடைக்கு வர தயங்குவதாலும், ஆட்கள் தட்டுப்பாட்டாலும், அறுவடை இயந்திரம் குறைவாக வந்துள்ளதாலும் கடந்த 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்ய வேண்டிய நெல் பயிர்கள் வயலிலே அறுவடை செய்யாமலேயே நெல் கதிர் முற்றி நெல்கள் உதிர்வதாலும் கீழ்வேளூர் பகுதியில் விவசாயிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனர். நோய், பூச்சிதாக்குதல், உரத்தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து தற்போது அறுவடைக்கு தயாரான நெல்லை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கலலை அடைந்துள்ளனர்.

Related Stories: