வேதாரண்யத்தில் பள்ளிகல்வி புரவலர் திட்டத்தில் முறைகேடு பெற்றோர் ஆசிரியர் கழகம் புகார்

வேதாரண்யம், ஜன.27: நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம் தெருவில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. 1894 ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி நூற்றாண்டை கடந்து இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு இருப்பில் உள்ள கல்வி புரவலர் நிதி சுமார் ரூ.3 லட்சம் வைப்புத்தொகை நிரந்தர வைப்புத்தொகையில் செலுத்தாமல் முறைகேடு நடந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் இப்பள்ளிக்கு சுமார் ரூ.8 லட்சம் செலவில் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் இடப்பற்றாக்குறை காரணமாக மூன்று வகுப்புகள் ஒரே வகுப்பறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் உடனடியாக பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட வேண்டும் எனவும், கல்வி புரவலர் நிதியில் நடைபெற்ற ஊழலை கண்டுபிடித்து ஊழல் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வசந்திசெல்வகுமார் முதல்வர் தனிப்பிரிவிற்கும் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

Related Stories: