தனி சுவை கொண்டது ஆந்திரா செல்லும் கூடலூர் மொச்சை பயறு வெளிநாடுகளுக்கும் ‘பேக்கிங்’ ஆகிறது

தேனி, ஜன.28: தேனி மாவட்டம், கூடலுாரில் விளையும் பச்சை மொச்சை பயறினை ஆந்திரா வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேனி மாவட்டம், கூடலுாரில் கழுதைமேடு மலைப்பகுதி, கண்ணகி கோயில் மலையடிவாரப்பகுதிகள், மற்றும் குமுளி, லோயர்கேம்ப் மலையடிவாரப்பகுதிகளில் அதிகளவில் பச்சை மொச்சை சாகுபடி செய்யப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் விளையும் இந்த மொச்சை தனிச்சுவை கொண்டது. மொத்தம் ஆண்டுக்கு இரண்டு மாதம் தான் சீசன் இருக்கும். தற்போது சீசன் நேரம். இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. பூச்சி தாக்குதல் இல்லாததால் பயிர்கள் நன்றாக விளைந்துள்ளன. இந்த மொச்சை கூடலுார் மார்க்கெட்டில் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி மார்க்கெட்டில் கிலோ 40 ரூபாய்க்கு விற்கின்றனர். ஆந்திரா மக்கள் கூடலுார் மொச்சையினை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் ஆந்திரா வியாபாரிகள் இங்கு வந்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி ஆந்திரா கொண்டு செல்கின்றனர். மார்கழி மாதம் சீசன் தொடங்கியது. தை மாதம் முழுவதும் மொச்சை வரத்து இருக்கும்.

கூடலுார் பகுதியை சேர்ந்த ஒரு பிரிவு மக்கள், இந்த மொச்சையினை தண்ணீரில் ஊற வைத்து, தோலை மட்டும் நீக்கி விட்டு, உள்ளே உள்ள தோல் நீக்கப்பட்ட பயறினை நன்றாக உலர்த்தி, பின்னர் எண்ணெய்யில் வறுத்து காரம், உப்பு சேர்த்து பேக்கிங் செய்கின்றனர். இப்படி பதப்படுத்தப்பட்ட மொச்சை பல மாதங்கள் வரை கெடாது. கூடலுார், குள்ளப்பகவுண்டன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இப்படி பதப்படுத்தி வறுத்து காரம் சேர்க்கப்பட்ட பச்சை மொச்சை பயறுகளை வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

Related Stories: