கால்நடை இணை இயக்குனர் இல்லாததால் பணிகள் முடக்கம்

தேனி, ஜன.28: தேனி கால்நடைத்துறையில் மூன்று மாதங்களாக கால்நடை இணை இயக்குனர் நியமிக்கப்படாததால் இத்துறை சார்ந்த பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட கால்நடைத்துறையில் தற்போது விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், கோழி வழங்கும் திட்டங்கள் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தவிர கால்நடை மருந்தகங்களை நிர்வகித்தல், மற்றும் பசும்புல் வளர்த்தல், தடுப்பூசி போடுதல் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடை தொடங்கி உள்ள நிலையில் ஆடு, மாடுகளுக்கு கோடை நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மாவட்டத்தில் பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தவிர மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கவும் அரசு தனித்தனியே ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது இத்திட்டப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தவிர மாவட்டத்தில் தற்போது கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் மிக அதிகளவில் காலியாக உள்ளன. ஒரே டாக்டர் பல மருந்தகங்களில் பணிபுரியும் நிலை காணப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் கால்நடை இணை இயக்குனர் பணியிடம் மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. பொறுப்பு அலுவலர் மூலம் இப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொறுப்பு அலுவலர் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டாலும், கால்நடை இணை இயக்குனர் நேரடி பணியிடத்தில் செயல்படும் அளவுக்கு செயல்பாடுகள் அமையாது என்பதால், தேனி மாவட்டத்தில் கால்நடை இணை இயக்குனர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். தவிர காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

Related Stories: