சின்னமனூர் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு? வெளிமாவட்ட மூட்டைகளை வாங்குவதாக விவசாயிகள் புகார்

சின்னமனூர், ஜன.28: சின்னமனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேடு செய்து வருதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

  சின்னமனூர் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் வருடம் இருபோகம் நெல் சாகுபடி முல்லை பெரியாற்று பாசனத்தில் நடந்து வருகிறது. நடப்பாண்டில் ஒன்றரை மாதம் தாமதமாக நெல் நடவு துவங்கியது. ஜனவரி 10ம் தேதியோடு அறுவடை நிறைவு செய்து ஒரு  போகத்துடன் முடிந்து விட்டது. பாசனநீர் கிடைக்காததால் இரண்டாம் போகம் முடக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகள்  தரிசாக கிடக்கின்றன.  இதனிடையே விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் செய்வதற்காக   சின்னமனூர் அரசு மருத்துவமனை சாலையில் தேனி கூட்டுறவு சங்க கட்டிடத்தின் வளாகத்தில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

சின்னமனூர் விவசாயிகள் அறுவடை நிறைவு செய்ததால் நெல் கொள்முதலும் முடிந்துவிட்டது. ஆனால் தற்போது இங்கு வெளி மாவட்டங்களிலிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து குடோன்களில் சேமித்து வைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் ஒரு மூடைக்கு 40 ரூபாய் வரையில் சன்மானமாக வாங்கிக்கொண்டு, அரசிற்கு செல்லாமல் முறைகேடுகள் செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சின்னமனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் என்ன நடக்கிறது என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். நெல் கொள்முதல் நிலைய பட்டியலர் குமரேசனிடம் கேட்டபோது, சின்னமனூரில் நெல் கொள்முதல் முடிந்து விட்டது. வெளி மாவட்டத்திலிருந்து வாங்குவதில்லை. கிராம நிர்வாக அதிகாரியின் கையெழுத்தோடு வருகிறது. இன்றுகூட 800 மூட்டைகள் நெல் வந்தது. முறைகேடு எப்படி நடக்கிறது, எந்த வழியில் நடக்கிறது என தெரியவில்லை என்றார்.

Related Stories: