குடியரசு தின விழாவிற்கு திமுக எம்எல்ஏவை புறக்கணித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அதிரடி

சிவகங்கை, ஜன.28: குடியரசு தின விழாவிற்கு திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பனுக்கு அழைப்பிதழ் வழங்கப்படாத விவகாரத்தில் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருப்பத்தூர் எம்எல்ஏ பெரியகருப்பன், ஜன.26 அன்று குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்காதது குறித்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பணி புரியும் இளநிலை உதவியாளர் பாரதிதாசன் மீது ஒழுங்கு நடவடிக்கையாக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் அழைப்பிதழ்கள் வழங்கிய விபரம் கண்காணிக்கும் முதுநிலை வருவாய் அலுவலர் சரவணக்குமார் தனது பணியினை சரியாக கண்காணித்து அழைப்பிதழ் வழங்கப்பட்ட விபரம் சரிபார்க்காததால் அவர் தேவகோட்டை தாசில்தார் அலுவலகம், தனி தாசில்தார்(ச.பா.தி) அலுவலகத்தில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட விபரம் கண்காணிக்க தவறியதால் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: